இலங்கை அரசின் திட்டமிடல் அற்ற நிர்வாக சீர்கேடு காரணமாகவும் ஊழல் காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் சென்றுள்ளது இதனால் நாளுக்கு நாள் பெரும் பொருளாதார சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று 16 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சியுடன் தொடர்கின்றது.


சித்திரை  மாதம் 9 ஆம் திகதி கொழும்பு - காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டமானது இன்று 16 ஆவது நாளாகவும் தொடர்கிறது.


இந்நிலையில் நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி தேவாலயத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி சிலுவையை சுமந்தபடி கொழும்பு நோக்கி பயணித்த நடிகர் ஜெகான் அப்புஹாமியும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்துகொண்டார். 



முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற தேவாலயமாக நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிலுவைப் பாதையை ஆரம்பித்து கால் நடையாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கிருந்து பின்னர் காலிமுகத்திடலில் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு நேற்று சென்று ஜெஹான் தனது நீதிக்கான போராட்டத்தை நிறைவு செய்திருந்தார்.    


அதேசமயம் இலங்கையில்  எரிபொருள் விலையுடன் தொடர்புபட்ட கட்டுமானப் பொருட்களின் அதிகரிப்பு காரணமாக நாட்டில் சுமார் 75% கட்டுமானப் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.இதனால் கூலித்தொழிலாளர்கள் குடும்பங்கள் கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளார்கள்.


நாட்டில் தற்போது மணல் கியூப் ஒன்றின் விலை மட்டும் 8,000 ரூபாவால் உயர்ந்துள்ளதாக அதன் துணைத் தலைவர் எம்.டி.போல் தெரிவித்தார்.


இதன் காரணமாக சுமார் 1.2 மில்லியன் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் அவர்கள் அன்றாடம் வாழ்க்கையை கொண்டுசெல்வதும் பெரும் சிரமமாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.