இலங்கையில் தமிழ் மக்கள் தீர்வொன்றினைப்பெற்று சுதந்திரமாக வாழ வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடித்துக்கலைக்கப்பட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்கின்ற அரசியல் தலைமைத்துவத்தினை கட்டியெழுப்ப வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண இணைப்பாளருமான தர்மலிங்கம் சுரேஸ் (Dharmalingam Suresh) தெரிவித்துள்ளார் .
நேற்று ஈழத்தின் மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இப்படி தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சுரேஷ் ,
“ தமிழ் மக்களுக்கு நடந்தது இன அழிப்பு, இந்த இன அழிப்புக்கான சர்வதேச விசாரணைக்கான சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதேல்லாம் அதனை கோராமல் தங்களது பதவிகளுக்காக தங்களது பைகளை நிரப்புவதற்காக இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்கொண்டு சென்று இன அழிப்பு விவகாரத்தினை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லாமல் கோட்டாபய அரசாங்கத்தினை பாதுகாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மிக வேகமாக இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள்.
தமிழ் தேசிய உணர்வுடன் உள்ள தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேற வேண்டும்.
தொடர்ந்தும் அங்கு இருப்பீர்களானால் இன்று அரசாங்கம் துரத்தியடிக்கப்படுவது போன்று உண்மையறிந்து தமிழ் மக்களால் ஒரு நாள் துரத்தியடிக்கப்படுவீர்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கின்றேன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இதுவரை காலமும் பொய்யைத்தான் தமிழ் மக்களுக்கு சொல்லிவந்துள்ளது.
இங்கு சந்திக்கும் வெளிநாட்டு தூதுவர்களிடம் இங்கு தமிழ் மக்களுக்கு இனப்படுகொலை நடைபெறவில்லை, தமிழ் மக்களுக்கு அநீதி நடைபெறவில்லையென்று இங்கு தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை மூடிமறைத்து வந்துள்ளார்கள். இதுவரை காலமும் பொய்களையே கூறிவந்துள்ளனர். இதனை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிங்கள மக்களினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திலேயே அந்த மக்கள் அடித்து துரத்தும் நிலையில் இவர்களை பாதுகாத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான பேரம் பேசலை செய்யவேண்டும்.
இல்லையெனில், தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடக்கு கிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள் ” என்று சுரேஷ் அவர்கள் மேலும் தெரிவித்தார் .
0 Comments