Ad Code

ஏழு தமிழர்களை விடுவிக்க தமிழக முதல்வர் விரும்பவில்லை -சீமான்

 


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல வருடங்களாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படியிருக்கும்போது புதிதாக வரும் ஆளுநர் ரவி ஒன்றும் செய்யமாட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறு பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித்தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார். கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அமர்ந்துள்ளது.


30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ள நிலையில் சில மாதங்களுக்குப் முன்பு பேசிய அமைச்சர் ரகுபதி, எழுவர் விடுதலையில் பல சட்டச்சிக்கல்கள் உள்ளன என்று கூறினார். ஏழுபேர் விடுதலையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய குடியரசுத் தலைவரை கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.


இந்தநிலையில்தான் திமுக அரசை விமர்சித்து பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். பாரதியார் மற்றும் இமானுவேல் சேகர் ஆகியோர் நினைவு தினத்தையொட்டி, தனது இல்லத்தின் முன்பு அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக்கொண்டு போகிறது என்ற பெருமை எனக்கு வந்திருக்கிறது என்று கூறி அதிர வைத்தார்.


நாம் தமிழர் கட்சி என்ன சொல்லியிருக்கிறதோ, என்ன எழுதி அறிக்கை விடுக்கிறதோ அதையெல்லாம் பார்த்துதான் திமுக அரசு செயல்படுத்துகிறது. நான் பேசுவதற்கு எதையும் மிச்சம் வைத்துவிடக்கூடாது என்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்று கூறிய சீமான் அதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறினார்.


தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், நான் திமுகவில் தொடர்ந்து இருந்திருந்தால் அமைச்சராக கூட இப்போது ஆகியிருப்பேன்.  தேசிய தலைவர்  பிரபாகரனை சந்தித்த பிறகுதான் எனக்குள் ஒரு வெளிச்சம் பாய்ந்தது அதுதான் தமிழ் தேசியம் என்றார்.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுவிக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை. அப்படியிருக்கும்போது புதிதாக வரும் தமிழக ஆளுநர் ரவி ஒன்றும் செய்யமாட்டார் என்று தெரிவித்தார். 

Post a Comment

0 Comments

Close Menu